சிந்தனையின் மூலமே நாம் வாழ்வில் எதையும் பெறுகிறோம். பாத்திரத்தைக் கழுவுதல் என்ற சாதாரண சிறிய செயல் முதல் சந்திரனில் இறங்குதல் என்ற மிகப் பெரிய செயல் வரை நம்மால் செய்ய முடிகிறது எனில் அதன் ஆரம்பம் ஒரு சிந்தனையிலாகும். எந்த ஒரு கலைப்படைப்பும் கலைஞனின் மனதில் தோன்றும் சிந்தனையில் தான் உருக்கொள்கிறது. சிந்தனைகளின் சக்தி எல்லையற்றது. ஆனால் வெறும் சிந்தனை மட்டும் போதாது. நம்மால் நாள் முழுவதும் அமர்ந்து சிந்திக்க முடியும். பல தினங்கள் மனதில் ஒரு விஷயத்தை பாவனை செய்ய முடியும். இதனால் மட்டும் அந்த சிந்தனை, அந்த பாவனை உண்மையாகி விடுமா? சிந்தனைகளை செயலாக வடிவமைக்க வேண்டும். கர்மமோ, சிந்தனையோ தனியாகச் செயல்படுவதால் பயனில்லை. நமது ஒவ்வொரு செயலும், சிந்தனையால் வழிநடத்தப்படவேண்டும். அப்போதுதான் பலன் விளையும்.
தீயால் வீட்டுக்கூரையையும் எரிக்கலாம், உணவும் தயாரிக்கலாம். தீயை நாம் எப்படி உபயோகிக்கிறோம் என்பதைப் பொறுத்திருக்கிறது. நல்ல சிந்தனையிலிருந்து நல்ல செயல் பிறக்கிறது. அது நல்ல பலனை அளிக்கிறது. தீய சிந்தனை தீய செயலுக்குக் காரணமாகிறது. அது தீய பலனை அளிக்கிறது. நல்ல சிந்தனையும், நற்செயலும் இணையும் இடத்திற்கு இறை அருள் வந்து சேரும். அதனால் நல்லதையே சிந்தியுங்கள், நன்றாகச் செயற்படுங்கள். அதுதான் வெற்றியை அடைவதற்கான ராஜபாதையாகும்.
No comments:
Post a Comment