Monday, October 29, 2012


சிந்தனையும், உடலும் ஒன்றினால் அங்கு உற்சாகம் ஊற்றெடுக்கிறது. சிந்தனையும், உடலும் ஈடுபடாத விஷயத்தினால் மனம் சலிப்படைகிறது. சிந்தனையையும், உடல் உழைப்பையும் இணைக்கும் பாலமே தியானம். மனம் ஒருமுகப்பட்டுவிட்டால் எந்த வேலையிலும் சுறுசுறுப்பும், திருப்தியும் உண்டாகும். சலிப்பிற்கு அங்கு இடமே இல்லை. இப்படி நாள்தோறும் மனதிற்கென்று ஒரு பயிற்சியாக தியானத்தை ஏற்படுத்தி வைத்திருக்கின்றனர். இத்தியானப் பயிற்சியில் கவனம் செலுத்தி, மனஒருமையோடு கடமைகளைச் செய்பவர்கள் நாளடைவில் தங்களின் பணியில் கூடுதல் திறமையும், வளர்ச்சியையும் பெற்றுவிடுவதை உணர்வார்கள்.

Thursday, October 25, 2012


அம்மா! உன் தரிசனத்தில் எல்லையில்லா ஆனந்தம் கொண்டேன்,  உன் அணைப்பிலும், முத்தத்திலும் என்னையே  மறந்தேன். உன்  புன்சிரிப்பில் பிறவிப் பனை அடைந்துவிட்டேன் அம்மா! ..யாரும் என்னோடு இல்லாத போதும் நீ என்னோடு எப்பொழுதும் இருக்கிறாய்.   இதைவிட வேறு எதுவும் எனக்கு வேண்டாம் அம்மா! நீ என் காதிற்குள் கூறிய வார்த்தைகளில் ஆழ்ந்த  மைதியும், தெளிவும்  உணர்ந்தேன்.  ஏழேழு  ஜென்மத்திற்கும்   உன்  தாமரைப் பொற்பாதங்கள்  பணிந்து, போற்றும்  வரம் மட்டும் வேண்டும் அம்மா! 

Sunday, October 21, 2012


உன்னைத் தேடி  அழுவதற்கு கூட கண்ணீர் வற்றி விட்டது கண்ணா! உன்னைத் தவிர வேறொன்றிலும்  என் மனம் நாட்டம் இல்லாமல் தவிக்கிறது. பார்க்கும் இடமெங்கும் உன்னையே காண்கிறேன்..எட்ட நின்று பார்க்கிறாய்  கிட்ட வந்தால் மாயமாகி விடுகிறாய்; என்னைப் பாடாய்ப் படுத்துறாய் மாயக்கண்ணா!  உன் அன்பெனும் இனிமையில் மூழ்க  ஏங்கும்  என்னை பிரிவென்னும் துன்பத்தில் மூழ்க வைத்து மகிழ்கிறாய் கண்ணா! உன் பிரிவால்  இறந்து  கொண்டிருக்கும் எனக்கு உன் நினைவுகள் தான் உயிர் கொடுக்கின்றன கண்ணா! உன் நினைவுகளே என்னை வாழவைத்துக்கொண்டிருக்கின்றன..அவற்றையும்  என்னிடமிருந்து பறித்து விடாதே கண்ணா!  
நீ வருவாய் என எதிர்பார்த்து  காத்திருப்பதே என் வாழ்க்கையாகிவிட்டது. உன்னைக் காணாமல் தீயாய்   எரிகின்றது என் இதயம்.. தூக்கி ஏறிய முடியாத உன் இனிய நினைவுகளுடன்  தவிக்கிறேன் கண்ணா! உன்னை நம்புவதை  விட உன்மேல் நான் கொண்ட  உண்மை அன்பை நம்புகிறேன்,  என்றோ நீ என்னைத் தேடி வருவாய்.. உன்னிடமிருந்து ஒரு சிறு துளி அன்பைத் தவிர  வேறு  எதுவுமே எனக்கு வேண்டாம் கண்ணா!  உன்னைத்தவிர  வேறு எதுவும்  எனக்கு  பெரிதில்லை கண்ணா!  என் உயிரோடு கலந்துவிட்ட நிஜம் நீ..என் உயிரே நீ தான் கண்ணா!  உந்தன் கடைக்கண் பார்வையில்  என் ஜென்மம் தீர  காத்திருக்கிறேன் கண்ணா!

Monday, October 15, 2012


இந்த உலகத்திலே நிறைய நோயும் துன்பமும் தூண்டுதலும் இருப்பதால் இது கெட்ட உலகம் என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால், நற்கருமங்கள் செய்து, ஜபம், தியானம் ஆகியவற்றைப் பயின்றுவந்தால் சாஸ்வதமான பேரானந்தத்தை அடையலாம். 
மனிதன் இறக்கும்பொழுதும் பின்னாலே அவனுடைய கர்மங்களை விட்டுச் செல்கிறான். இந்த ஸ்தூல சரீரம்  சாகலாம். அழியலாம். ஆனால் அவனுடைய செய்கைகளின் பாதிப்புகள் அழிவதில்லை. 

Thursday, October 4, 2012