மரத்துப்போன இதயங்கள் --சிந்தனைக்கதை----
ஒரு சமய மாநாட்டில் பங்கெடுப்பதற்காக நால்வர் ஒரு தீவில் தங்கினர். மிகவும் குளிராக இருந்தது. பயணிகள் நால்வரின் கையிலும் குளிர் காய்வதற்கு தேவையான தீப்பெட்டியும், விறகும் இருந்தன. ஆனால் தன் கையில் மட்டுமே விறகும், தீப்பெட்டியும் இருப்பதாக அந்நால்வரும் கருதினர்.
முதல் ஆள் " அவன் கழுத்தில் தொங்கும் டொலரைக் கண்டால் அவன் வேறு மதத்தை சேர்ந்தவன் என்று தோன்றுகிறது. நான் எதற்காக அவனுக்கும் சேர்த்து தீ மூட்ட வேண்டும்" என்று சிந்தித்தான்:
இரண்டாவது ஆள் "இவன் எதிரி நாட்டை சேர்ந்தவன். எங்களுடன் எப்போதும் போர் செய்பவன். என் விறகும் தீப்பெட்டியும் உபயோகித்து அவன் குளிர்காய வேண்டாம். அதை என்னால் சகித்துக்கொள்ள முடியாது" என்று நினைத்தான்.
மூன்றாவது ஆள் " மற்றொருவனை நோக்கி இவனை எனக்கு நன்றாகத் தெரியும். இவன் எங்கள் மதத்திற்கு பிரச்சனைகளை உண்டாக்கும் பிரிவைச் சேர்ந்தவன். என் விறகையும், தீப்பெட்டியையும் உபயோகித்து இவன் குளிர் காய்வதை என்னால் கனவு கூட காண முடியாது" என்று எண்ணினான்.
நான்காவது ஆள்; "அவனுடைய உடல் நிறத்தைப் பார், எனக்கு இந்நிறத்தவரை கண்டாலே வெறுப்பு. நான் இவனுக்கு தீமூட்டிக் கொடுக்கும் பேச்சே இல்லை" என்று தீர்மானித்தான்.
இவ்வாறு நால்வரும் தங்கள் கையிலிருந்த விறகையும், தீப்பெட்டியையும் உபயோகிக்காமல் குளிரால் உடல் விறைத்து இறந்து போனார்கள். உண்மையில் இவர்கள் இறந்தது வெளியில் நிலவிய குளிரால் அல்ல. மரத்துப்போன அவர்கள் மனோபாவத்தினால் தான். இது போல் நாடு, மதம், இனம், மொழி என்று நாமும் மரத்துப்போன இதயங்களால் அழிந்து கொண்டிருக்கிறோம். வேற்றுமையிலும் ஒற்றுமை காண்போம். அன்பால் உலகை ஆள்வோம்.





