Thursday, September 30, 2010

மும்மூர்த்திகள்: ஒரே தெய்வத்தின் மூன்று இயல்புகள்
சனாதன தர்மத்தில் இறைவனின் நிர்க்குண பாவமும், சகுன பாவமும் தனிச் சிறப்புகளுடன் விவரிக்கப்பட்டுள்ளன. படைத்து, காத்து, அழித்து பிரபஞ்சத்தைக் கட்டுப்படுத்தும் இயல்பு சகுன இறைவனுக்கு உரியதாகும். அதே சமயம், படைப்புக்கு அப்பாற்பட்ட நிலையானதும், மாற்றம் ஏதுமில்லாததுமான இறை குணமே பிரம்மமாகும். அது நிர்குணம் என்று சொல்லலாம். பிரம்மம் படைப்பென்னும் லீலை புரிய சங்கல்பிக்கும் போது சகுன இறைவனின் பாவங்கள் தோன்றுகின்றன. அவையே பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரன். இவை மூன்றும் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றை நடத்தும் பிரம்மத்தின் பாவங்களாகும். ஒரே சைதன்யமே மும்மூர்த்திகள் வடிவத்தில் வெளிப்படுகிறது
.
விக்கிரகத்தை வழிபடுவதன் தத்துவம்.
இறைவனின் அர்ச்சாவதார வடிவங்களாக விளங்குபவை விக்கிரகங்கள். மகான்கள் பிராணப் பிரதிஷ்டையின் மூலமாக விக்கிரகப் பிரதிஷ்டை செய்தால் அங்கே இறைசக்தியின் சாந்நித்தியம் உண்டாகும். விக்கிரகங்களை பக்தியுடன் வழிபட்டால் நிச்சயமாகப் பலன் கிடைக்கும். விக்கிரகத்தை தெய்வமாகக் கருதித்தான் பக்தர்கள் வழிபடுகிறார்கள். அபிஷேகம், அர்ச்சனை, நைவேத்தியம் போன்றவற்றை ஒரு மனிதனுக்கு கொடுப்பது போன்ற பாவனையுடனும், நம்பிக்கையுடனும்தான் விக்கிரக வடிவிலுள்ள தெய்வத்திற்கு கொடுக்கிறார்கள். இதற்கு சாஸ்திர பூர்வமான முத்திரைகளும், அனுஷ்டானங்களும் உள்ளன. இருப்பினும் அன்புடன் கூடிய வழிபாடுதான் இறைவனுக்கு விருப்பமானது. ஸ்ரீராம கிருஷ்ணரைப் போன்ற மகான்கள் விக்கிரக ஆராதனையின் மூலமும் இறை அனுபூதி பெறமுடியும் என்பதற்கு நேரடி உதாரணங்களாவர்.

Wednesday, September 22, 2010

அறுபதாம் திருமணம்

தம்பதியர் அறுபது வயது முடிந்ததும் திருமணம் செய்கின்றனர். இத்திருமணத் திற்கு என்று தனியான தத்துவப்பின்னணி உண்டு. இல்லற வாழ்வில் அறுபதுவயதுவரை மனிதன் ஆசாபாசங்களில் சிக்கித் தவிக்கிறான். இதன்பிறகு உலகியல் பாசபந்தங்களை விட முயல வேண்டும் என்பதை நினைவுபடுத்துவதே இத்திருமணம். எழுபது வயதில் மனிதன் மனமுதிர்ச்சி பெற்று ரிஷிகளைப் போன்று பக்குவநிலையை அடைகிறான். எண்பதாவது வயதில் எட்டுத்திசைகளையும் பாதுகாக்கும் தெய்வங்கள் மனிதனுக்கு வழிகாட்டுகின்றனர். தொண்ணூறாவது வயதில் நவக்கிரகங்களின் முழு ஆசியும் மனிதனுக்குக் கிடைக்கிறது. நூறாவது வயது அடைவது மிகவும் சிரமம். அப்போது ஐம்புலன்களின் செயல்கள் அனைத்தும் கட்டுப்பட்டு விடுகின்றன. இந்த உன்னதமான நிலையை மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் அடைய வேண்டும் என்ற குறிக்கோளைக் காட்டுவதற்குத் தான் "நீ நூறு வயது வாழ வேண்டும்' என்று கூறிப் பெரியவர்கள் வாழ்த்துகின்றனர். அறுபது வயதில் சஷ்டியப்தப் பூர்த்தியையும், அறுபது வயதிற்குப் பிறகு, எண்பதாவது வயதில் சதாபிஷேகத்தையும் நடத்துவது நம்மை மேலும் மேலும் பக்குவமாக்கி உயர்நிலை அடைவதற்குத்தான்.

Friday, September 17, 2010

* ஒரு மனிதனோடு பழகும் போது அளந்து பழக வேண்டும். பால் வாங்கும்போதும், துணி எடுக்கும் போதும் அளந்து தானே வாங்குகிறோம். அதுபோல், யாரிடம் பழகினாலும் அளந்து பழகாவிட்டால் துன்பம் வந்து சேரும்.
* நம் உடம்பின் அளவுகோல் கண். கண்ணின் தன்மையைக் கொண்டே அவன் எப்படிப்பட்டவன் என்பதை கணக்கிட்டு விடலாம். மனிதனின் மனநிலையைக் கண்களே காட்டிக் கொடுக்கும் தன்மையுடையது. 
* இரவில் முறையாக தூங்கி ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது. தூக்கம் வந்தால் ஒழிய படுக்கையில் படுப்பது கூடாது. தூக்கம் வராவிட்டால் மனதை உயர்நிலைக்கு இட்டுச் செல்லும் அறநூல்களையும், தர்மசாஸ்திரங்களைப் படியுங்கள். 
* குடும்பம் பசுமரத்தைப் போன்றது. அதில் மனைவி வேர். கணவன் அடிமரம். பிள்ளைச் செல்வங்கள் கிளைகள். அன்பு இலைகள். கருணை மலர்கள். அம்மரத்தில் விளையும் பழங்கள் தான் அறச்செயல்கள். மரங்கள் பலவிதமான உயிர்களுக்கும், பறவைகளுக்கும், மனிதர்களுக்கும் நிழலும், கனிகளும் தருவது போல, நமது குடும்பம் என்னும் மரத்தால் மற்றவர்கள் பயன்பெற வேண்டும்.

-வாரியார்