ஒரு பக்தன் நிறைய ஆப்பிள், திராட்சை, மற்றும் பலவித பலகாரங்களை எல்லாம் வாங்கி பூஜை அறையில் வைத்தான். பிறகு இறைவனை நோக்கி, " இறைவா! நான் உனக்காக எதையெல்லாம் வாங்கி வந்திருக்கிறேன் என்று பார்த்தாயா? இப்போது உனக்கு திருப்தி தானே?" என்று கேட்டான்: உடனே ஒரு குரல்; "இல்லை, எனக்கு இது ஒன்றும் திருப்தியைத் தரவில்லை" என்றது.
"இறைவா, உனக்கு திருப்தியை அளிப்பது எது என்று சொல். நான் அதை வாங்கி வருகிறேன்" என்றான் பக்தன். " இதய மலர் என்று ஒரு மலர் இருக்கிறது ; அதுதான் எனக்கு மிகவும் விருப்பமானது" என்றார் இறைவன். பக்தன் "அது எங்கே கிடக்கும்" என்று கேட்டான். "மிகவும் அருகிலுள்ள வீட்டில் கிடைக்கும்" என்றார் இறைவன். பக்தன் உடனே அடுத்த வீட்டிற்குச் சென்று விசாரித்தான். ஆனால் அவர்களுக்கு அப்படி ஒரு மலரைக் குறித்து எதுவுமே தெரியவில்லை. அந்த மலரைத் தேடி அவன் அந்தக் கிராமத்திலிருந்த எல்லா வீடுகளுக்கும் சென்றான். அனைவரிடமிருந்தும் ஒரே பதில்தான் கிடைத்தது " அப்படி ஒரு மலரைக் குறித்து நாங்கள் கேட்டதுமில்லை, கண்டதுமில்லை" என்று. சோர்வடைந்த பக்தன் பகவானிடம் திரும்பிச் சென்று சாஸ்டாங்கமாக நமஸ்கரித்து "இறைவா! என்னை மன்னிக்க வேண்டும்; நான் இந்தக் கிராமம் முழுவதும் தேடினேன். ஆனால் நீ சொன்ன அந்த இதய மலர் எங்குமே கிடைக்கவில்லை. இனி உனக்கு தருவதற்கு என்னிடம் என் மனம் மட்டுமே உள்ளது" என்றான். "இதுதான் நான் விரும்பிய மலர்-இதய மலர். நீ அளித்தவை எல்லாம் என் சக்தியால் வளர்ந்தவை. என் சக்தியின்றி உனது கையைத் தூக்க உன்னால் முடியாது. உலகிலுள்ளவை அனைத்தும் என் படைப்பாகும். ஆனால் உனது படைப்பு ஒன்று உண்டு. "நான்" என்ற எண்ணம். அதைத்தான் எனக்கு சமர்ப்பிக்க வேண்டும். மனமே எல்லாவற்றையும் விட, நான் விரும்ம்பும் மலர்." என்று கூறினார் பகவான்..♥♠♥♠♥♠♥♠♥♠ ♥♠♥♠♥♠
No comments:
Post a Comment