அம்மாவின் வாழ்க்கை வரலாற்றை வார்த்தைகளால் சுருக்கிவிட முடியாது: எனினும் அவரின் வாழ்க்கையே நம் மனித குலத்திற்கு ஒரு பாடமாக இருக்கிறது, நாம் அனைவரும் நிச்சயம் தெரிந்து கொள்ளவும் வேண்டியது. அம்மாவின் அன்பு மழையில் நனைந்து கொண்டிருக்கும் குழந்தைகளுக்காக அவரின் வாழ்க்கை
வரலாற்றை பதிவு செய்கிறேன்
அம்மாவின் அவதாரம்.---பறையகடவு -கேரளமாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமம்:அந்தக் கிராமத்தில் வசித்த இடமனேல் குடும்பத்தை சேர்ந்தவர் சுகுனானந்தர் அவரது மனைவி தமயந்தி. கடவுள் பக்தி மிகுந்த அந்த தம்பதிக்கு ஒன்பது குழந்தைகள் பிறந்தன.ஒரு குழந்தை பிறந்த இரண்டு மாதங்களிலேயே இறந்து விட்டது.மற்ற எட்டு குழந்தைகளில் நான்கு பெண்கள்.நான்கு பையன்கள்.இவர்களில் நான்காவதாகப் பிறந்த குழந்தையின் பெயர் தான் சுதாமணி.பெண்குழந்தை.1953ம் வருடம் செப்டம்பர் மாதம் 27 ம் திகதி பிறந்த சுதாமணி தான் இன்று உலகெங்கும் பக்தர்களால் அன்புடன் அம்மா என்று அழைக்கப்படும் ஸ்ரீமாதா அமிர்தானந்தமாயி. சுதாமணி பிறக்கும் பொழுதே அவரது கை விரல்கள் சின் முத்திரை தாங்கி இருந்ததாக அவரது பெற்றோர்கள் கூறியுள்ளார்கள்.
ஐந்து வயதிலேயே கண்ணன் மீது பக்திப் பாடல்களை தானே இயற்றி பாட ஆரம்பித்தார் சுதாமணி.அவருக்கு நல்ல குரல் வளம் இருந்தது.தான் எழுதிய பாட்டுக்களை சுதாமணி பாடுகிற போது அதைக் கேட்க கிராமத்து மக்கள் ஆர்வமுடன் கூடுவார்கள்.ஐந்து வயதில் சுதாமணி உள்ளூர் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.அவரது அபாரமான நினைவாற்றல், அறிவுக்கூர்மை,எதையும் சட்டென்று கிரகித்துக்கொள்ளும் திறமை இவை எல்லாம் பள்ளியில் ஆசிரியர்களை வியப்பில் ஆழ்த்தின.விளையாட்டு போல மிக எளிதாக பாடங்களை மனப்பாடம் செய்தார்.தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் வாங்கினார்.ஒன்பது வயதான போது அவரது தாயாரின் உடல் நலம் குன்றியது.குடும்ப வேலைகளை செய்ய வேண்டிய பொறுப்பு சுதாமணியின் தலையில் விழுந்தது.மாட்டுத் தொழுவத்தை சுத்தம் செய்வது முதல் சமையல் வேலைகள் வரை அனைத்தையும் சுதாமணியே செய்யலானார்.சுதாமணி பள்ளிப்படிப்பை தொடர முடியாமல் போனது.--------
இடை விடாத வீட்டு வேலைகளுக்கு மத்தியிலும் சுதாமணி, தினமும் ஏழைகளுக்கும் பிச்சைக்காரர்களுக்கும் உணவு அளிப்பதற்கு தவறமாட்டார். வீட்டுக்கு அருகில் உள்ள முதியோர்கள், கவனிக்க ஆளில்லாத போது அவர்களை குளிப்பாட்டி, உடை மாற்றி, சாப்பாடு ஊட்டி அன்புடனும் அக்கறையுடனும் கவனித்துக்கொள்ளுவார். ஒரு தடவை, இந்த அக்கறை கொஞ்சம் அதிகமாகிவிட்டது. அடுத்த வீட்டிலிருந்த ஏழைப்பெண்மணி ஒரு நாள் தன் கஷ்டங்களை எல்லாம் சுதாமணியிடம் சொல்லி அழுதாள். சுதாமணியின் மனம் அதைக்கேட்டு மிகவும் வேதனைப்பட்டது. நேரே தன் வீட்டுக்குப்போனார். வீட்டிலிருந்து தன் அம்மாவின் தங்க நகை ஒன்றை எடுத்துக் கொண்டு வந்து அப்பெண்ணிடம் கொடுத்து விட்டார். இந்த விடயம் தெரிந்த போது சுதாமணியின் வீட்டார் கடும் கோபம் அடைந்தனர். அப்பா சுகுனானந்தர், மகளை ஒரு மரத்தில் கட்டி வைத்து ரத்தம் வரும் வரை அடித்துத் தீர்த்தார்.அவிழ்த்து விடப்பட்ட போது, நேரே வீட்டுப்பூஜை அறைக்குச் சென்று, "கடவுளே! பெற்றோரால் மகளிடம் இவ்வளவு கொடூரமாக நடந்து கொள்ள முடியுமா? எனக்கு ஏன் இந்த சோதனை? என்னை உன்னிடமே அழைத்துக்கொள்ள மாட்டாயா? " என்று அழுத படி பிரார்த்தனை செய்தார்.
பதினேழாவது வயதில் சுதாமணிக்கு தையல் கற்றுக் கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது. பெற்றோரிடம் தையல் வகுப்பிற்கு போக அனுமதி கேட்டார். ஆனால் பெற்றோரது அனுமதி கிடைக்க வில்லை.மிகவும் மன்றாடிக் கேட்டுக் கொண்டதன் பேரில் தினமும் ஒரு மணி நேரம் தையல் வகுப்பிற்கு போய் வர அனுமதி கிட்டியது. தன் வீட்டு வேலைகளை சீக்கிரமாக முடித்து விட்டு தையல் வகுப்பிற்கு போக ஆரம்பித்தார் சுதாமணி.-
வகுப்பில் சேர அனுமதித்ததே பெரிய விஷயம் என்பதால், தையல் வகுப்பிற்கான கட்டணத்தை பெற்றோரிடமிருந்து வாங்கிக்கொள்ள அவர் விரும்பவில்லை.எனவே, வசதி படைத்த சிலருக்கு துணி தைத்துக் கொடுத்து அதன் மூலம் கிடைத்த பணத்திலிருந்து பயிற்சிக் கட்டணம் கட்டினார்.அப்படிச் சம்பாதித்த பணத்தில்,கட்டணம் போக மிகுதியை ஏழைகளுக்கு உதவிட பயன்படுத்திக் கொண்டார்.தையல் வகுப்பினை நடத்தியவர் அந்த ஊரிலிருந்த தேவாலய பாதிரியார். தையல் வகுப்பில் தையல் இயந்திரத்தில் தைத்துக் கொண்டே, அது எழுப்பும் சத்தத்துக்கு ஏற்ப பாடியபடி சுதாமணி தைப்பார். அவரின் பக்தியும் பண்பாடும் அந்த பாதிரியாரை மிகவும் கவர்ந்தது. சில ஆண்டுகளுக்குப் பின் வேறு ஊருக்கு மாற்றலாகி போன அந்த எழுபது வயதினைத் தாண்டிய பாதிரியார் தேவாலய பாதிரியாருக்கு எழுதிய கடிதங்களில், சுதாமணியைப் பற்றி அன்புடன் விசாரித்ததுண்டு.
சுமார் இருபது வயதான போது சுதாமணிக்கு திருமணம் செய்து வைத்து விட வேண்டுமென அவரது பெற்றோர்கள் நினைத்தனர். ஒரு நாள் அவர்கள் வீட்டுக்கு அருகில் இருந்த ஒரு வீட்டுக்கு சட்டை தைக்க அளவு எடுக்க வேண்டும் என்று சொல்லி சுதாமணியை அழைத்துச் சென்றனர். அந்த வீட்டுக்குப் போனதும் அந்த வீட்டுப் பெண்மணி, ஒரு செம்பில் தண்ணீரை கொடுத்து அடுத்த அறையில் இருந்த இளைஞரிடம் அந்தத் தண்ணீர் செம்பைக் கொடுக்கச் சொன்னார். இது பெண் பார்க்கும் தந்திரம் என்பதைப் புரிந்து கொண்ட சுதாமணி " நான் சட்டைக்கு அளவு கொடுக்கத்தான் வந்தேனேயொழிய யாருக்கும் தண்ணீர் கொடுக்க வரவில்லை!" என்று பட்டென்று சொல்லிவிட்டு அந்த வீட்டிலிருந்து வெளியேறி விட்டார்.அடுத்தடுத்து சுதாமணியைப் பார்க்க வரன்கள் வந்த போதும், ஏறத்தாழ இதே அனுபவம் தான். இந்நிலையில் தான் சுதாமணி தனது சிறந்த கடவுள் பக்தியினால் கிருஷ்ண பாவத்தை வெளிப்படுத்தினார். -----
சுதாமணி, ஆரம்ப காலத்தில், வீட்டுக்கு அருகிலிருந்த ஒரு ஆலமரத்தின் அடியில்தான் கிருஷ்ண பாவத்தில் தரிசனம் அளித்து வந்தார்.அந்த மரத்தை ஒட்டி ஒரு சாலை இருந்தது. அந்தச் சாலை வழியாக போகிற பொது மக்கள் சுதாமணியைக் கவனிப்பதை கௌரவமில்லை என்று கருதினர். அவருடைய தந்தை சுகுனானந்தர் அது குறித்து சுதாமணியிடம் குறை கூறினார்.ஒரு நாள் தரிசன நேரத்தில், சுதாமணியிடம் நேரில் வந்து தன்னுடைய மனதில் பட்டதைக் கூறினார். அதற்கு சுதாமணி "அப்படியானால் பக்தர்களுக்கு தரிசனம் அளிப்பதற்கு வேறு இடம் பார்த்துக் கொடுங்கள், நல்ல இடமாக இல்லை என்றாலும் ஒரு மாட்டுத்தொழுவம் கூடப் போதுமானது". என்று கூறி விட்டார். இதைக் கேட்ட சுகுனானந்தர், தனது மாட்டுத் தொழுவத்தை இரண்டு பகுதிகளாகப் பிரித்தார்.தரையை சிமெண்ட் தளமாக்கினார். ஒரு பகுதியை மாடுகளை கட்டப் பயன்படுத்திக் கொண்டு மறு பகுதியை கோயில் போல் உருமாற்றினார். சுதாமணி, அங்கேயே தன்னுடைய பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கத் தொடங்கினார். ஆனால் இந்த ஏற்பாடு சுதாமணியின் அண்ணன் சுபகனுக்குப் பிடிக்கவில்லை.
நாளுக்கு நாள் சுதாமணியின் இறைபக்தி, குறிப்பாக கிருஷ்ண பக்தி தீவிரமடைந்து கொண்டே வந்தது. கண்ணன் மீது ஏராளமான பாடல்களை இயற்றிப் பாடத் தொடங்கினார். பூஜை அறையிலேயே அதிக நேரம் செலவழித்தார். தன நினைவு இழந்த நிலையில், கண்களிலிருந்து தாரைதாரையாகக் கண்ணீர் வழியும். மகளுக்கு, மனோவியாதியாக இருக்குமோ என்று சந்தேகப்பட்ட பெற்றோர், ஒரு மந்திரவாதியை அழைத்துக் கொண்டு வந்து மந்திரித்த ஒரு கயிறைக் கட்டினார்கள்.
சில சமயங்களில் சுதாமணிக்குத் ´தானே கிருஷ்ணன் என்ற எண்ணம் வந்து விடும். பேரானந்தத்தில் திளைத்த நிலையில் நடனம் ஆடுவார். தூங்கினால் கனவில் கண்ணன் வருவதாகக் கூறுவார். நாளடைவில் கண்ணன், சுதாமணியை முழுமையாக ஆக்கிரமிக்கத் தொடங்கினார். சுதாமணியின் பக்தியினால் கவரப்பட்ட ஏராளமான மக்கள் அவரைக் காண வரத் தொடங்கினார்கள். சுதாமணி தன்னையே கிரிஷ்ணனாக பாவித்து அவர்களுக்கு அருளாசி வழங்கத் தொடங்கினார். அவது மாட்டுத் தொழுவமே பக்தர்கள் கூடுமிடமானது. சுதாமணியைக் காண வரும் பக்தர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தனர். அதே நேரம் அவருக்கு எதிர்ப்பாளர்களும் தோன்றினார்கள்.நாஸ்திகர்கள் ஆன அவர்கள், தங்களை "குருட்டு நம்பிக்கைகளை அகற்றும் குழு" என சொல்லிக் கொண்டனர். அக்கம் பக்கத்து கிராமங்களின் இளைஞர்களைத் தம்முடன் இணைத்துக் கொண்டு சுதாமணி பற்றி அவதூறுப் பிரசாரம் செய்தனர். பக்தி என்ற பெயரில், அப்பாவிப் பொதுமக்களை ஏமாற்றிவருகிறார்கள் சுதாமணியும் அவரது தந்தையும் என்று துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்தனர். காவல் துறையினருக்கும் புகார் கொடுத்தனர்.காவல் துறை சுதாமணியை விசாரிக்க வந்தது. "இந்த இடம் நான் விரும்புகிற மாதிரி இல்லை. என்னை சிறையில் அடைத்து வையுங்கள், நான் அங்கே அமைதியாகத் தியானம் செய்கிறேன்! பூஜை செய்கிறேன்" என்று சொன்னார். அவரது கபடமற்ற பேச்சினையும், மன உறுதியினையும் கண்ட காவல் துறையினர் வெறுமனே திரும்பிச் சென்றனர். அதன் பின், உள்ளூர் காவல் துறை தங்கள் புகாருக்கு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என மேலதிகாரிகளுக்கு புகார் போனது, அவர்களும் வந்து விசாரணை நடாத்தி சுதாமணி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று கூறி சென்று விட்டனர்.
இரவு நேரங்களில் தன்னுடைய வீட்டுக்கு அருகிலிருந்த கடற்கரைக்கு போய் தியானம் செய்வதை சுதாமணி மிகவும் விரும்பினார். லேசான வெளிச்சம், பரந்த நீல வானம், அதில் மின்னும் நட்சத்திரங்கள், உடலைத் தழுவிச் செல்லும் போதே மனதுக்கு இதமான கடற்காற்று, இவை அனைத்தும் தேவியின் தெய்வீகத் தன்மையை வெளிப்படுத்துவதாக அவருக்குத் தோன்றும்.கடற்கரைக்குச் சென்று அமர்ந்த சில நிமிடங்களிலேயே அவரது மனம் அமைதியாகி உள்முகமாகி விடும்.
சுதாமணி, அமைதியாக கடற்கரையில் தியானம் செய்து கொண்டிருக்க, அவருடைய வீட்டில் சுகுனானந்தர் தன மகளைக் காணாமல் தவிப்புடன் தேடிக்கொண்டு கடற்கரைக்கு வருவார். அங்கே சுதாமணி ஒரு பாறையைப் போல் அசையாமல் தியானத்தில் மூழ்கி இருப்பார். சுதாமணி இரவு நேரத்தில் தனியாக கடற்கரைக்குச் செல்வதற்கான காரணத்தை அறியாத ஊரார், அவரைப் பற்றி அவதூறாகப் பேசலானார்கள். இது சுகுனானந்தரையும் தமயந்தி அம்மாவையும் மன வருத்தமடையச் செய்தது. இதனால், சுகுனானந்தர் மிகவும் முயற்சி செய்து தன மகள் இரவில் தியானம் செய்ய கடற்கரைக்குச் செல்வதை தடுத்து விட்டார்.
சுதாமணியின் பக்தி சாதாரண மனிதர்களைப் போன்றதில்லை. அவர் தன்னை மறந்து தியானம் செய்வார். சில சமயங்களில் தேம்பித் தேம்பி அழுவார்.மற்றொரு சமயம், சின்னக் குழந்தையைப் போல் கைகளால் தாளமிட்டவாறு சிரிப்பார், தரையில் விழுந்து உருளுவார், காற்றைக் கூட "கண்ணா" என்றழைத்து அணைப்பார். சுதாமணியின் இத்தகைய உயர் நிலைப் பக்தியைப் பார்த்த அவரது குடும்பத்தினரும், ஊர்க்காரர்களும் அவருக்கு மனநோய் என முடிவு கட்டினார்கள். அவரை அடக்கி வைக்க எண்ணித் துன்புறுத்தினர். இத்தகைய நடவடிக்கைகளால் மனம் நொந்த சுதாமணி, கடலில் குதித்து உயிரை மாய்த்துக் கொள்ள தீர்மானித்தார். ---உயிரை விடுவதற்கு கடலை நோக்கி ஓடினார். தண்ணீரை நெருங்கிய போது அவரை ஏதோ ஒன்று தடுத்தது. நீல வானிலும், கடல் நீரிலும் அவர் கண்ட காட்சியில் அவர் மனம் லயித்தது. கடற்கரை மணலில் விழுந்து நினைவு இழந்தார். வெகு நேரம் கழித்து அவரை வீட்டுக்கு தூக்கிக் கொண்டு வந்தார்கள். சுதாமணியை பைத்தியம் என்று சொன்னவர்கள் இருந்தாலும், அவர் மீது அன்பு காட்டி அவருக்காக இரக்கம் காட்டியவர்களும் ஊரில் இருந்தார்கள். ஒரு நாள் உப்பங்கழி பகுதியில் சுதாமணி இந்த உலக உணர்வின்றி சகதி நிறைந்த மணலில் படுத்திருந்தார். உடல் முழுவதும் ஈர மணல் ஒட்டியிருந்தது. கண்களில் கண்ணீர் பெருகிக் கொண்டிருந்தது. அவரைக் கண்டவர்கள், அவரது வீட்டுக்குப் போய் அவருடைய தந்தை சுகுனானந்தரிடம் விஷயத்தை சொன்னார்கள். ஆனால் அவரோ அது பற்றிக் கவலைப் படவில்லை. கடைசியில் ஊர் மக்களே அவரைத் தூக்கிக் கொண்டு போய் வீட்டுக்குள் படுக்க வைத்தார்கள். சிறிது நேரத்தில் வீடு திரும்பிய அண்ணன் சுபகன், " இந்தச் சனியனை, என் கட்டிலில் யார் படுக்க வைத்தது?" என்று கூச்சல் போட்டான். கட்டிலை கடுமையாக உலுக்கினான். கட்டிலே உடைந்து போனது. உடைந்த கட்டிலுக்கு மத்தியில் சுதாமணி சுயநினைவு இல்லாமல் இருந்தார். நினைவு திரும்பியதும், நடந்த சம்பவங்களைக் கேள்விப் பட்டு, "எல்லாம் நன்மைக்கே" என்று கூறினார்.
மறுநாள் தச்சு வேலைக்காரர் ஒருவர், ஒரு கட்டில், மேசை, நாற்காலி மூன்றையும் கொண்டுவந்து சுதாமணிக்கு காணிக்கையாக கொடுத்தார். பகவான் கிருஷ்ணர், தன் கனவில் வந்து சுதாமணிக்கு இவற்றைக் கொண்டு வந்து கொடுக்குமாறு ஆணையிட்டதாக கூறினார்.தொடரும்-----
முதலாம் அத்தியாயம் முடிந்து விட்டது. இரண்டாம் பாகம் புதிதாக தொடரப் படும். ♥♥♥♥✿◕‿◕♥♥♥♥✿◕‿◕
அம்மாவின் வாழ்க்கை வரலாறு இரண்டாம் பாகம்
சுதாமணியைக் காணவரும் பக்தர்கள் அவரை அம்மா என்று அழைக்கத் தொடங்கினார்கள். அம்மாவுக்கு கிளிகள் என்றால் மிகவும் விருப்பம்.இயற்கை அழகு சூழ்ந்த அவரது வீடு இருந்த பகுதியில் பலவிதமான பறவைகள் பறந்து திரியும்.பல சமயங்களில் அம்மாவின் தோள்களின் மீது கிளிகள் பறந்து வந்து அமர்ந்து கொள்ளும். அம்மாவைக் காண வரும் பக்தர்கள் கிளி, புறா போன்ற பறவைகளை அன்புடன் அளிப்பதுண்டு.அம்மா அவற்றை ஒரு போதும் கூண்டில் அடைத்து வைத்ததில்லை.ஆனாலும் அந்தப் பறவைகள் அந்த இடத்தை விட்டு ஒரு போதும் பறந்து சென்றதுமில்லை ஒரு முறை அவரது இல்லத்திற்கு அருகிலிருந்த பெரிய மரம் ஒன்றில் ஒரு கருடன் கூடு கட்டி குஞ்சு பொரித்திருந்தது. ஒரு நாள் அந்தக் கூடு உடைந்து இரண்டு குஞ்சுகள் கீழே விழுந்து விட்டன. சில சிறுவர்கள் அந்தக் குஞ்சுகளின் மீது கல்லெறிந்து கொல்ல முயன்றனர். அப்போது அந்தக் குஞ்சுகளை காப்பாற்றிய அம்மா, அவற்றிற்கு பாலூட்டி வளர்த்து, சுயமாக பறக்கிற நிலை வந்ததும் வானத்தில் பறக்க விட்டு சந்தோசப்பட்டார்.
சில தினங்களில் அம்மா தியானத்தில் ஈடுபட்ட நேரத்தில், பாம்புகள் அவரது உடலின் மேலால் ஊர்ந்து சென்றதாகவும் சிலர் கண்டதாவும் சொல்வார்கள்.ஒரு நாள் இடமன்னேல் இல்லத்திற்கு ஒரு நாய் வந்தது. அது எப்போதும் அம்மாவையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கும். அம்மா தியானத்தில் தன்னை மறந்து இருக்கும் போது, அருகிலேயே நின்று கொண்டு இருக்கும். யாராவது அம்மாவுக்குத் துன்பம் விளைவிக்க முயற்சி செய்தால் அவர்களைப் பார்த்து உரத்து குரைக்கும். சில சமயங்களில் அம்மா இந்த நாயையே தலையணையாக்கி, அதன் மீது தலை வைத்து வானத்தை நோக்கி பார்த்த படி படுத்திருப்பார். பல சமயங்களில் அந்த நாயும் அம்மாவின் மடியில் வந்து படுத்துக் கொள்ளும். ஒருநாள், அந்த நாயை நகராட்சியின் நாய் பிடிப்பவர்கள் பிடித்து விட்டார்கள். இந்தத் தகவலை கேள்விப்பட்ட அம்மா, அங்கே சென்றார். அவரைக் கண்டவுடன் குரலெடுத்து அழுவது போல் ஓலமிட்டது.அதன் கண்களில் கண்ணீர் பெருகியது. இந்தக் காட்சியைக் கண்ட நகராட்சியினர், அந்த நாயை விட்டு விட்டார்கள்.
ஒரு நாள் அம்மாவுக்கு ஏற்பட்ட தியான அனுபவம் வித்தியாசமானது. அது குறித்து அம்மாவே சொன்னது இது: "தியானத்தில் ஆழ்ந்திருந்த போது திடீரென்று கோரைப் பற்களும், நீண்ட நாக்கும், அடர்ந்து நீண்ட கருங்கூந்தலும், சிவந்த விழிகளும் கொண்ட காளி தேவி என்னைத் துரத்துவது போல உணர்ந்தேன். உடனே காளியிடமிருந்து தப்பித்து ஓட நினைத்தேன். அதன் பின், நானே காளி என்று உணர்ந்தேன். அடுத்த நிமிடம் என் கையில் வீணை இருப்பதாக உணர்ந்தேன். தலையில் தேவியின் கிரீடம். ´
'அதெப்படி நான் தேவியாக முடியும்' என என்னை நானே கேட்டுக் கொண்டேன். அடுத்து, சிவனைத் தியானம் செய்தேன். தலையில் நாகம், ஜடாமுடியுடன் நானே சிவனாக உணர்ந்தேன். அடுத்து விநாயகரைத் தியானித்த போது, எனக்கு விநாயகரின் திருவுருவம் ஏற்பட்டு விட்டதாக உணர்ந்தேன். இப்படி இறைவனின் எந்த வடிவைத் தியானித்தாலும், நான் அந்த உருவமாக மாறுவதாகவே உணர்ந்தேன். அப்போது என்னுள்ளே இருந்து ஒரு குரல் " இவர்கள் அனைவரும் உன்னுடன் என்றைக்கோ கலந்து விட்டார்கள். அப்படி இருக்க நீ ஏன் எல்லாத் தெய்வங்களையும் அழைக்கிறாய்?
என்று கேட்டது. அதன் பிறகு தெய்வ உருவங்களை தியானிப்பதை அம்மா நிறுத்தி விட்டார். எங்கும் நிறைந்த நாதப் பிரம்மமாகிய "ஓம்"அவருக்குள்ளே இனிமையாக ஒலித்தது.அந்த நாத வெள்ளத்தில் அம்மாவின் உள்ளம் கரைந்தது. ஆனாலும் அம்மா இன்றும் தொடர்ந்து தியானம் செய்து கொண்டிருக்கிறார். இது பற்றிக் கேட்டால், "தியானத்தின் மூலமாக அம்மா குழந்தைகள் அனைவரிடமும் -குறிப்பாக என்னை மனமுருக நினைப்பவர்கள் மற்றும் கஷ்டப்படுகிறவர்கள் ஆகியோரிடம் நான் செல்கிறேன்". என்று கூறுகிறார்
ஒரு நாள் சகோதரன் சுபகனும் இன்னும் சிலரும்; உறவினர் ஒருவர் வீட்டுக்குப் போகலாம் என்று சொல்லி அம்மாவை அழைத்துச் சென்று முன்னமே திட்டமிட்டபடி ஒரு வீட்டின் அறைக்குள் தள்ளி, கதவை மூடினார்கள்."உன்னால் குடும்பத்துக்கு எத்தனை அவமானம்! நீ உனது ஆட்டத்தையும் பாட்டத்தையும் நிறுத்தி விடுவதாக சத்தியம் செய்து தராவிட்டால் உன்னைக் கொன்று விடுவோம்!: " என்று மிரட்டினார்கள். ஒருவன் கத்தியை எடுத்துக்காட்டி கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினான்.கையில் கத்தியுடன் அம்மாவை நெருங்கினான்.
"எனக்கு மரணத்தைக் கண்டு பயமில்லை" என்றார் அம்மா. அம்மாவை அவன் கத்தியால் குத்த முயற்சித்த போது, அவனால் ஒரு அடி கூட நகர முடியவில்லை. தாங்க முடியாத நெஞ்சு வழியால் துடித்தபடி கீழே விழுந்தான். அவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். தன்னை கத்தியால் குத்திக் கொலை செய்தவனைக் காண அம்மா மருத்துவமனைக்குச் சென்றார். அவனுக்கு அன்புடன் ஆறுதல் சொல்லி, தன் கையால் உணவு ஊட்டி விட்டார். அம்மாவின் அன்பு மழையில் அவன் நனைந்தான்.
அம்மாவுக்கு பலவிதங்களில் தொல்லைகள் கொடுத்து வந்த உடன் பிறந்த சகோதரன் சுபகன் யானைக்கால் நோயால் மிகவும் கஷ்டப்பட்டான். திடீரென்று 1978 ஜூலை மாதம் ஒரு நாள் இரவு "தான் தீராத வியாதியால் அவதிப் படுவதால், தற்கொலை செய்து கொள்கிறேன்" என்று கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டான். அம்மாவுக்கு எதிரானவர்கள் இதனை வைத்து அம்மாவுக்கும் அவரது தந்தை சுகுனானந்தருக்கும் சிக்கல் ஏற்படுத்தத் திட்டமிட்டார்கள். சுபகன் தற்கொலை செய்து கொள்ளவில்லை. இது திட்டமிட்ட கொலை என்று பிரசாரம் செய்து, அம்மாவையும் அவரது தந்தையையும் குற்றவாளிகளாக்க முயன்றனர். ஆனால் சுபகன், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னால் தனது சில நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தன்னுடைய முடிவைத் தெரிவித்து கடிதம் எழுதி இருந்தான். பிரேதப் பரிசோதனையும் இந்த முடிவு ஆதாரமற்றது என்று நிரூபித்தது.
அம்மாவின் அன்பாலும் கருணையாலும் ஈர்க்கப்பட்ட சில பிரம்மச்சாரிகள், அம்மாவின் சீடர்களாகி அம்மாவுடனேயே தங்கினார்கள். மிகவும் வசதிகள் குறைந்த அந்தச் சூழ்நிலையை யாரும் பொருட்படுத்தவில்லை. பாய், தலையணை இன்றி வெறுந்தரையில் படுத்து உறங்கினார்கள். கிடைத்த உணவை தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர், வெளியூர்களுக்கு போகிற போது பேருந்துக் கட்டணம் கட்ட வழி இல்லாமல் நடந்தே சென்று வந்தனர்.
அம்மா வழக்கமான தனது வெள்ளை ஆடையில் பக்தர்களுக்கு தரிசனம் அளித்தாலும், அவ்வப்போது தலையில் கிரீடம், கழுத்தில் மாலை போன்றவற்றுடன் தேவியைப் போல் தரிசனம் அளிப்பது வழக்கம். இதற்கு தேவிபாவ தரிசனம் என்று பெயர். பல பக்தர்கள் அம்மாவை இந்தக் கோலத்தில் தரிசனம் செய்து பெரும் மகிழ்ச்சியடைவதுண்டு, என்றாலும் சிலர் அம்மாவிடம், " நீங்கள் ஏன் தேவியைப் போல உங்களை அலங்கரித்துக் கொள்கிறீர்கள்?" என்று கேட்பதுண்டு. அதற்கு அம்மா அளிக்கும் பதில் " ஒவ்வொரு உடையும் அதற்குரிய முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நாம் பிறக்கும் போது, ஆடையின்றிப் பிறந்தாலும், பின்னர் நாம் வாழும் நாடு, அங்கு நிலவும் கலாசாரம், பழக்கவழக்கம் ஆகியவற்றுக்கு ஏற்ப உடை அணிகிறோம். ஒருவன் என்ன உடை அணிந்திருந்தாலும் அவன் மனிதனே! இக்காலத்தில் மக்கள் உடைக்கு மிகவும் மதிப்பளிக்கிறார்கள். உடைகள் அதன் தன்மைக்கேற்ப விளைவுகளை ஏற்படுத்துகிறது. இது போன்றது தான் "தேவிபாவ அலங்காரம்" என்று கூறினார். அம்மாவுடன் பலமணி நேரம் பேசினாலும் திருப்தியடையாத பக்தர்கள், தேவிபாவ தரிசனத்தின் போது சில நிமிடங்கள் பேசியதுமே திருப்தியடைந்து விடுகிறார்கள். தங்கள் மனக் குறைகளை தேவியிடமே கூறியதாக மன நிறைவினை அவர்கள் பெறுகிறார்கள்.
அமிர்தானந்தமயி மடம் இன்று மாபெரும் ஆசிரமமாக வளர்ந்து பல கிளைகளையும் கொண்டுள்ளது. இறைவனை அடைவதையும் உலகிற்கு தன்னலம் அற்ற சேவை செய்வதையும் வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்ட நூற்றுக் கணக்கான ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஆன்மீகப்பயிற்சியளித்து வருகிறார் அம்மா. பாரதத்தினர் மட்டுமல்லாது, உலகின் பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் ஆசிரமத்தை தங்களுடைய ஆன்மீக இல்லமாக கருதுகிறார்கள். ஆசிரமத்தில் தங்கியுள்ள சமயங்களில், ஆசிரமத்தின் எல்லா வேலைகளிலும் அம்மா பங்கேற்கிறார். சமையல் அறையில் காய்கறி வெட்டுவது, கட்டட வேலை நடந்தால் தானும் மற்ற ஆசிரமவாசிகளுடன் சேர்ந்து மணலையும், கற்களையும் சுமப்பார்.மலத் தொட்டியினை துப்பரவு செய்யும் பணியில் கூட அம்மா தன்னையும் ஈடு படுத்திக்கொண்டதுண்டு. எந்த வேலையானாலும் சரி ஆசிரமவாசிகளிடம் சொல்லிவிட்டு தான் சும்மா இருந்தோம் என்பதே அம்மாவின் அகராதியில் கிடையாது. இரவு பூராவும் பக்தர்களுக்கு தரிசனம் அளித்தாலும் கூட, களைப்பு ஏதுமின்றி எல்லோருடனும் சேர்ந்து வேலை செய்வார். அம்மாவே கூட நின்று வேலை செய்கிறபோது, ஆசிரமவாசிகள் இன்னும் சுறுசுறுப்பாக வேலை செய்வார்கள்.அதனால் வேலை சீக்கிரமே முடிந்துவிடும்.
ஒரு நாள் அம்மாவைத் தரிசிக்க நோய்வாய்ப்பட்ட இளம் பெண்ணொருத்தி வந்திருந்தாள். அவளை அம்மா அரவணைத்து ஆசி கூறிய போது, அவள் அம்மா அணிந்திருந்த வெள்ளைச் சேலையின் மீது வாந்தி எடுத்து விட்டாள். அம்மா, சற்று கூட அருவெறுப்பு அடையாமல் எழுந்து சென்று சேலை மாற்றி வந்தார். வாந்தி பட்ட சேலையை சுத்தம் செய்வதற்காக, ஒரு பிரம்மச்சாரிணி ஒரு கழியினை எடுத்துக் கொண்டு வந்து அதன் நுனியால் சேலையினை எடுத்துக் கொண்டு செல்வதை அம்மா கவனித்து விட்டார். " சேவை செய்ய வந்து விட்டு அருவெறுப்பு பார்ப்பது தவறு, எல்லோரிடமும் இறைவனைக் கண்டு சமமான மனோபாவத்துடன் சேவை செய்வது தான் தெய்வீகம். அதனைப் புரிந்து கொள்ளாமல், பஜனை, தியானம் இவைகளால் எந்த விதமான பயனுமில்லை." என்று அந்த பிரம்மசாரிணிக்கு அறிவுரை சொன்னதுடன் நிற்காமல், தானே அந்த சேலையை துவைத்தார் அம்மா.
அம்மா எப்போதுமே இந்த உலகத்தை ஒரு மலர் என்றும் இந்த உலகிலுள்ள பல்வேறு நாடுகளையும் அந்த மலரின் இதழ்கள் என்றும் வர்ணிப்பார்.1987 ம் ஆண்டு முதல் அம்மா பல்வேறு உலக நாடுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் விஜயம் செய்கிறார். அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி,இத்தாலி, சுவிசர்லாந்து,ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், ஜப்பான், கனடா, மலேசியா என பல நாடுகள் இதில் அடங்கும். இந்த நாடுகளுக்குப் போகும் போது, அங்குள்ள பல்வேறு நகரங்களுக்கும் சென்று அம்மா தன பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார். தவிர, இங்கெல்லாம் சத்சங்கம், தியானப் பயிற்சி, பூஜை ஆகிய அனைத்தும் நடைபெறுவது வழக்கம். அம்மா செல்லும் இடங்களிலெல்லாம் திரண்டு வரும் பக்தர்கள், அம்மாவிடம் ஏராளமான கேள்விகள் கேட்பார்கள். அம்மா, அந்தக் கேள்விகளுக்கெல்லாம் புன்சிரிப்புடன் பதிலளிப்பார். பொதுவாக, அம்மா, மலையாளத்தில் உரையாற்ற அது இந்தியாவானாலும் சரி அயல் நாடானாலும் சரி உள்ளூர் மொழியில் மொழி பெயர்க்கப்படும். ஆனாலும் அம்மா பேசும் அன்பு என்கிற மொழியை அனைவராலும் புரிந்து கொள்ள முடிகிறது. 2002 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவோடு அமரிக்காவில் ஒரு ஆன்மீக மாநாடு நடந்தது. அதில் கலந்து கொள்ள அம்மாவுக்கும் அழைப்பு வந்தது. அம்மா அதில் கலந்து கொண்டு "உலக அமைதிக்கு உற்ற வழி" என்ற தலைப்பில் உரையாற்றினார். அவரது உரை அங்கு திரண்டிருந்த அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. எல்லோரும் அமைதியாக கேட்டு அதிசயப்பட்டனர். ஆனந்தமடைந்தனர்'
இவ்வுலகிலுள்ள கோடிக்கணக்கானோர் இன்று அம்மாவைத் தங்களுடைய தாயாகவும்,குருவாகவும் கருதுகின்றனர்.1993 ம் ஆண்டு சிகாகோ நகரில் நடைபெற்ற சர்வ மதப் பேரவையில் அம்மா கலந்து கொண்டு உரையாற்றினார். அந்தச் சபையில் இந்து மதத்திற்காக மூன்று தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அம்மூவருள் அம்மாவும் ஒருவர். இன்றைய இந்துமதம் என்கிற சர்வதேச ஆங்கில மாதப் பத்திரிகை அதே ஆண்டில், அம்மாவை அந்த ஆண்டிற்கான Hindu of the year ஆகத் தேர்ந்தெடுத்தது. ஐக்கிய நாடுகள் சபையின் பொன்விழாவை ஒட்டி 1995ம் ஆண்டு நியூயார்க் நகரின் தெய்வீக தூய ஜான் தேவாலயத்தில் ஒரு சர்வ மத சபை கூடியது. உலகிலுள்ள மிகப்பெரிய தேவாலயங்களில் இதுவும் ஒன்று. அம்மா இங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார்.நிகழ்ச்சியின் முடிவில் அம்மா உலக நலன் வேண்டி, "லோகா சமஸ்தா ஷுகினோ பவந்து " (எல்லா உலகங்களும் இன்புற்று இருப்பதாகுக!) என்று பிரார்த்திக்க அதில் அனைவரும் கலந்து கொண்டனர்.
உலகெங்குமுள்ள எண்ணற்ற மக்களை அம்மா உயர்ந்தவர்களாக, நல்லவர்களாக உருவாக்கி வருகிறார்.கோபமுள்ளவர்களை அன்புமிக்கவர்களாகவும், தீயவர்களைத் தூயவர்களாகவும் மாற்றி வருகிறார். திக்கற்றவர்கள் தங்களுக்கு உற்றதுணையாக அம்மா இருப்பதை உணர்கின்றனர். நம்பிக்கை இழந்தவர்களின் உள்ளத்தில் அம்மா நம்பிக்கை ஊட்டுகிறார். துன்புற்றவர்களின் துயரைத் துடைக்கிறார். நாம் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி உறுதுணையாக வேண்டுமென அம்மா கூறுகிறார்.தமது குறைகளை இறைவனிடம் கூறுமாறு அம்மா வலியுறுத்தி வருகிறார்.எல்லாவற்றிற்கும் மேலாக அம்மா, தனது குழந்தைகள், வாழ்வின் உன்னதமான இலட்சியமாகிய ஆத்மானுபூதியை அடைவதற்கு ஒவ்வொரு படித்தரத்திலும் உதவி வருகிறார்.
♥♥ " அம்மாவிடமிருந்து அன்பு இடைவிடாது இவ்வுலகிலுள்ள எல்லா ஜீவன்களையும் நோக்கிப் பாய்ந்து கொண்டிருக்கிறது. இது என் இயல்பாகும் என்று அம்மா கூறுகிறார்" அம்மாவின் அளப்பரிய சேவை தொடர்ந்து கொண்டேயிருக்கும். நாங்கள் என்றென்றும் அவர் அன்பு மழையில் நனைந்து கொண்டேயிருப்போம்..........♥♥

No comments:
Post a Comment