Thursday, March 4, 2010
ஸ்ரீஅரவிந்தர்
"Peace, Calm, Quiet, Silence" ஆகிய சொற்கள் நுட்பமான பொருள் வேறுபாடு உடையன. அவைகளை விளக்குவது கடினம்.
Peace - சாந்தி
Calm - அமைதி
Quiet - நிம்மதி
Silence -மோனம்
துருதுருப்பும் கலக்கமும் இல்லாத நிலைதான் நிம்மதி. எந்தத் தொல்லைகளும் பாதிக்காத அசையாத தெளிந்த நிலையே அமைதி. இது நிம்மதியை விட எதிர்மறைத்தன்மை குறைந்தது.
சாந்தி இன்னும் அதிக தெளிவான நிலை. அதில் நிலைபெற்ற இசைவுடன் கூடிய ஓய்வும் விடுதலையும் உணரப்படுகிறது.
மோனத்தில் மன, பிராண இயக்கங்களே இரா. அல்லது மேற்பரப்பிலுள்ள எந்த இயக்கமும் உள்ளே செல்லவோ மாற்றவோ முடியாது. பெரும் நிசப்தமாயிருக்கும்.
**
நிம்மதியை இழந்துவிடாதே; சிறிது காலத்திற்கு அது வெற்று நிம்மதியாயிருந்தாலும் பரவாயில்லை. உணர்வு ஒரு பாத்திரம் போன்றது. அதிலுள்ள கலப்புகளை அல்லது வேண்டாத பொருட்களை அடிக்கடி காலி பண்ண வேண்டும். அதைப் புதிய, உண்மையான, சரியான, தூய பண்டங்களால் நிரப்புமுன் சிறிது காலம் காலியாக வைத்திருப்பது அவசியம். கவனமாயிருக்க வேண்டிய ஒரே விஷயம்: பாத்திரத்தை மீண்டும் பழைய மண்டியால் நிரப்புவதைத் தவிர்க்க வேண்டும். இதற்கிடையில், பொறுமையோடிருந்து உன்னை மேல்நோக்கித் திற; அமைதியைக் கெடுக்கக் கூடிய அதிக ஆவல் இல்லாமல், மோனத்தினுள் சாந்தி வருவதற்கு, நிம்மதியாக, நிலையாக அழை; சாந்தி வந்து நிலைத்தபின் ஆனந்தத்தையும் தெய்வ சாந்நித்யத்தையும் அழை முதலில் ஏதோ எதிர்மறைப் பொருள் போல தோன்றினும், அமைதியைப் பெறுவது மிகக் கடினம். ஆகவே, அதை அடைவதைப் பெரிய முன்னேற்றமாகவே கருத வேண்டும்.
உண்மையில் அமைதி எதிர்மறைப் பொருளன்று. சத்-புருஷனின் இயல்பே அதுதான்; அதுவே தெய்வ உணர்வின் ஆக்கமான அடிப்படை. வேறு எதற்காக ஆர்வமுற்று அடைந்த போதிலும் இதைக் காக்க வேண்டும். ஞானமும், சக்தியும், ஆனந்தமுமே வந்தாலும் அமைதி அடிப்படை இல்லையென்றால் அவை இங்கே தங்க முடியாமல் போய்விடும். சத் - புருஷனின் தெய்வீகத் தூய்மையும், சாந்தியும் நிரந்தரமாக இங்கு நிலை நாட்டப்படும் வரை அவை காத்திருக்க வேண்டியதாகும்.
தெய்வ உணர்வின் பிற தத்துவங்களை எல்லாம் அடைய ஆர்வமுறு. ஆனால், ஆர்வம் ஆழ்ந்த அமைதியுடன் கூடியதாக இருக்கட்டும். அமைதியுடன் தீவிரம் இருக்கலாம்; பொறுமையின்மை, துருதுருப்பு, இராஜச ஆவல் கூடாது.
நிம்மதியான மனத்திலும் ஜீவனிலுமே அதிமன பேருண்மை தனது உண்மையான படைப்பை நிர்ணயிக்க முடியும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment