முழு நிலவொளியில் எழில் கொஞ்சும் கபிலபுரத்தின் திண்ணையில் பொன்னுசாமி உறங்குகிறான். திக்கற்றவர்க்கு தெய்வமே துணை என்ற பழமொழிக்கு தக்க உதாரணம் இவன் வாழ்க்கை. சிறு வயதிலேயே பெற்றவர்களை இழந்த பொன்னுசாமி கபிலபுரத்து சிவன் கோயிலில் வளர்ந்து வந்தான். திருப்பணியாற்றி, தேவாரம் பாடி, சிவன் பிரசாதம் உண்டும் கோயில் திண்ணையில் உறங்கியும் பொன்னுசாமி வாழ்ந்து வந்தான். நொடிப்பொழுது போல் இருபது வருடங்கள் உருண்டோடி விட்டன.
கடுமையாக உழைத்ததன் அசதியில் உறங்கிப்போன பொன்னுசாமி ஒரு கனாக்கண்டான். பொன்னியாற்றின் மணல்ப்பரப்பில் "உன் வாழ்க்கை" என்ற அறிவிப்புத் தாங்கிய பலகை, அவன் இதுவரை வாழ்ந்த வாழ்க்கையின் நிழல் சித்திரமாக அவனை நோக்கிச் சிரித்தது. தனது வாழ்க்கைப் பாதையில் நான்கு ஜோடி கால் சுவடுகளை பொன்னுசாமி கண்டான். சற்று உற்று நோக்கிய போது, ஒரு ஜோடி அவனுடையது என்றும் மற்ற ஜோடி தனக்கு எல்லாமாகிய சிவபெருமானின் பாதச் சுவடுகள் என்றும் அவனுக்குப் புரிந்தது.
தன் வாழ்க்கையைக் குறிக்கும் மணல்ப்பரப்பு முழுவதும் கடவுளின் கால்சுவடுகள், தனது கால்சுவடுகளோடு கூட வருவதைக் கண்டவன் "ஆஹா! நம்முடன் சிவபெருமான் வாழ்க்கை முழுவதும் நடந்து வந்திருக்கிறாரே! நம்மைக் கைப்பிடித்து வழிநடத்தி இருக்கிறாரே!" என நினைத்து நினைத்து பூரித்துப் போனான். பொன்னுசாமி மணல்பரப்பில் அங்குமிங்குமென மணல்மேடுகள் நிறைந்திருப்பதைக் கண்டதும்; சற்றே உற்று நோக்கினான். மணல் மேடுகளின் மேல் ஒரு ஜோடி கால்சுவடுகள் மட்டும் காணப்படுவதைக் கண்டு பதைத்துப் போனான். "ஈசனே! இது தகுமா! என் வாழ்க்கையின் இக்கட்டான கட்டங்களைக் குறிக்கும் மணல்மேடுகளில் என்னை அம்போ என்று விட்டுவிட்டீர்களே?" என்று புலம்பினான்.
"மகனே! உற்று நோக்கு" என்று குரல் கேட்க; உற்று நோக்கினான். மணல்மேடுகளில் பதிந்தது ஈசனின் பாதச் சுவடுகளேயன்றி தனது கால்சுவடுகளல்ல என்று புரிந்தது. "மகனே! இக்கட்டான சூழ்நிலைகளில் உன்னை நடக்க விடாது எனது தோள்களில் வைத்து சுமந்து சென்றேன். அதனால் தான் எனது கால்சுவடுகள் மட்டும் காணப்படுகிறது. மணல் மேடுகளில் உன்னை நான்தான் சுமந்து சென்றேன்" என்று ஒலி கேட்டது.
திடுக்கிட்டு எழுந்த பொன்னுசாமி " இது கனவல்ல. ஈசன் தனக்கு புகட்டிய பாடம்" என்றே கருதினான். அன்று முதல் வாழ்க்கையைப் பற்றிய அவனது கண்ணோட்டமே மாறிவிட்டது. ஏதாவது கஷ்டம் வரும்போது " இது மணல்மேடு. என்னை இப்பொழுது ஈசன்தான் சுமக்கிறார் " என்று நினைத்துக் கொள்வான். மணல்மேடுகள் வெறும் மணல்துகள்களாவதைக் கண்டான்.
"நம் கண்ணோட்டத்தில் நாம் செய்யும் சின்னஞ்சிறு மாற்றங்கள் நமது வாழ்க்கையையே மாற்றியமைக்கும் வல்லமையுள்ளவையாகும்".

No comments:
Post a Comment