இது பகுத்தறிவு மற்றும் யுக்தியின் உலகமாகும். இதயத்தின் மொழியை இன்றைய மனிதன் மறந்திருக்கிறான். பரஸ்பரம் அன்பு செலுத்தவும், நம்பிக்கை வைக்கவும், மதிப்பளிக்கவும் கற்பிக்கும் இதயத்தின் மொழி இன்று மறைந்து கொண்டிருக்கிறது.
சொர்க்கமும், நரகமும் பூமியில் தான் இருக்கின்றன. அதைப் படைப்பது நமது மனமே. அதனால் அந்த மனத்தைக் கட்டுப்படுத்தக் கற்றுக்கொள்ளுங்கள். அதன்பின் துன்பப்பட நேரிடாது. ஆனந்தம் மட்டுமே எஞ்சி நிற்கும்.
சுயநலம் நெருப்புப்பொறி போன்றது. நம்முடைய அமைதி முழுவதையும் குலைக்க சிறிதளவு சுயநலம் போதும். எந்த விதத்திலாவது சுயநலமில்லாமல் வாழப்பழகுங்கள்.
நமது ஒவ்வொரு செயலும், அறிந்தோ, அறியாமலோ பிறருக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதுபோலவே, பிறரது செயல்கள் நம்மையும் பாதிக்கின்றன. அதனால்தான் நம்முடைய ஒவ்வொரு சிந்தனையிலும், வாக்கிலும், செயலிலும் கவனமாக இருப்பது அவசியம்.
வாழ்க்கை என்பது இதயம் நிறைந்த சிரிப்பாக மாற வேண்டும். அதுவே மதம்; அதுதான் ஆன்மிகம்; அதுவே உண்மையான பிரார்த்தனை. உள்ளத்திலிருந்து வெளிப்படும் களங்கமற்ற புன்னகையே இறைவன்.
நல்ல சிந்தனைகளாலும், நச்செயல்களாலும் நம் வாழ்வைப் பொருள் நிறைந்ததாக ஆக்க வேண்டும். எதிலும் நன்மையை மட்டும் காண முயற்சி செய்யுங்கள். யாரையும் பார்த்துப் பொறாமைப் படாதீர்கள். ஆடம்பரமில்லாமல் வாழுங்கள். பலனை எதிர்பாராது சேவை செய்யுங்கள்.

No comments:
Post a Comment