Friday, July 20, 2012


மாயவா!  உன்னிடமிருந்து  ஒரு  சிறிய அன்பைத் தேடி அலைகிறேன். நான்   உன் அன்பை அடைய  நெருங்கும் போது  அதை நீ  தட்டிவிட்டுப் போய் விட்டாய்.   துன்பக் கண்ணீரை  அருந்தியவாறு  தினமும் உறங்க முடியாமல் தவிக்கின்றேன். என் ஒட்டு மொத்த அன்பையும் கொட்டிக் கொடுத்துவிட்டேன்  உன்னிடம்.   உனக்கு  இரக்கமே இல்லையா?   உன்னை அன்புடன் நினைக்காத நேரமே இல்லை.   என்   இதயத்துடிப்பே  நீயாகி விட்டாய் கண்ணா! அழுகின்ற  கண்கள் நீ காணாததேன்?  ஓடி வந்து ஆறுதல் கூறாததேன்?
உன்னை  எங்கே  தேடுவேன்?  உனக்காகக் காத்திருக்கிறேன்  குறும்புக்காரா!   உனது தரிசனம் தந்தருள்க! நீ  என்னோடு இல்லாவிடில் எனக்கு  எதிலுமே நாட்டமில்லை.  கண்ணா!  மதுசூதனா!  விரைவில் வந்தருள்க!  கிருஷ்ணா!   என் குரலைக் கேட்காதது போலிருப்பதேனோ?    என் துன்பத்தைப் பார்க்காதது போல் நடிப்பதேனோ?  உலகத்தையும், என்னையும்  உனக்காக  அனைத்தையும் மறந்து  தவிக்கின்றேன்.   ஈடிணையில்லா  அன்பை  ரசித்து மகிழும் உனக்கு  என் அன்பு மட்டும்  புரியுதில்லையா  கண்ணா? அல்லது கண்டும் காணாமல் இருந்து என்னை சித்திரவதை செய்கிறாயா?  உனக்கு  என்மேல்   கருணையே  இல்லையா கல்நெஞ்சக்காரா??  உன்னை  எதிர்பார்த்து  ஏங்கி   அழுகின்றேன். "நல்லா  அழு,    உன் தலைவிதி என்கிறாயா?"  என்ன பாவம் செய்தேன்  கண்ணா!  உன் பிரிவால்  அழுதழுதே செத்துக்கொண்டிருக்கிறேன் கண்ணா! என் மேல் கொஞ்சமாவது கருணை காட்ட மாட்டாயா?  உனக்காக  நான்  அழுவதும் எனக்கு  ஆனந்தமாக உள்ளது.   என் ஆயுள் முழுவதும்  உனக்காகவே  மட்டும்  அழும் பாக்கியத்தை  எனக்கு கொடுத்துவிடு  கண்ணா!  

No comments:

Post a Comment