Wednesday, April 17, 2013


பிருந்தாவனத்தின் ஒவ்வொரு கோபிகையும் ஒவ்வொரு ரிஷிக்கு சமானமாக இருந்தனர். கோபிகைகள்  என்னதான் இல்லறத்தில் ஈடுபட்டிருந்தாலும்  எப்பொழுதும் அகலாத கிருஷ்ண தியானத்திலேயே இருந்தார்கள். . சுகப் பிரம்மரிஷி, ஜட பரதர், ரிஷிப யோகி போன்றோர்கள் எப்படிப்பட்ட உயர்ந்த  பிரம்ம ஞானத்தில் திளைத்துக் கிடந்தார்களோ அப்படித்தான் கோபிகைகளும் இருந்தனர். அவர்களை கிருஷ்ணனின் காதலிகள் என்று சொல்வதா...  யோகத்தின் உச்சநிலை நிற்கும் யோகினிகள் என்று அழைப்பதா... இல்லை, எப்படி அழைத்தாலும் அவர்களை விளக்குவது மிகவும் கடினம் என்று  அமைதியாக இருப்பதுதான் நல்லதா என்று சொல்லும்படியாக அவர்கள் திகழ்ந்தார்கள். முற்றிலுமான சரணாகதி அது. சரணாகதி செய்து விட்டால் எது நடந்தாலும் அது கிருஷ்ணனின் திருவுளப்படிதான் நடக்கிறது என்கிற திடம் வந்துவிடும். உடலால் எல்லா காரியங்களையும் செய்வார்கள். ஆனால், மனம் எப்போதும் கிருஷ்ண நாமத்தையோ அல்லது தியானத்திலோ இருக்கும்.. வாழ்வின் கவலைகளையும் துக்கங்களையும் சுகங்களையும் எல்லோரையும்போல அனுபவிப்பதாக தெரிந்தாலும் மாபெரும் சக்தியே அனைத்தையும் நடத்துவிக்கிறது என்கிற எண்ணம் அவர்களிடம்  வலிமையாக  இருந்தது. 

No comments:

Post a Comment